எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.

Wednesday, May 16, 2012

வசந்த கால நினைவுகளே! (nostalgia?) :D

மின் தமிழில் நண்பர் சந்தானம் என்பவர் அந்தக் காலத்து(பாட்டிகாலத்து)க் குழந்தைப் பாடல்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும், இது ஒவ்வொரு நகருக்கும் மாறுபடும் என்றும் தான் தஞ்சை/மதுரைப் பக்கம் என்பதால் அந்தப் பக்கத்துப் பாடல்கள் சிலவற்றைச் சொல்ல முடியும் என்றும் சொல்லி இருந்தார்.  அவர் மனைவி திருநெல்வேலியாம்.  அவங்க அந்தப் பக்கத்துப் பாடல்களைக் கொடுப்பார் என்றார்.  உடனே எனக்கு நினைவில் வந்த பாடல்.
 ஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள்.  அவங்க பெயர் மறந்து போச்சாம்.  அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.

கொழு கொழு கன்னே
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்திலிருக்கும் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பெயரென்ன??

ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.

இது சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லப் பட்டது.  ஒரு சில குழுமங்களில் இது விவாதிக்கப் பட்டது.

இன்னொண்ணு எலியைப் பற்றிய வர்ணனை.  ஒரு கதையாகச் சொல்லப் படும்.

அதிலே எலிக்குக் கால்கள், கண்கள், வால் உள்ளன என்பதை ஒரு பாட்டாகச் சொல்வாங்க.

அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள்.  குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது.  ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது.  வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி?

அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?
 இப்படிப் போகும்.

 பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது
கோனார் வீட்டிலே
கொய்யாப்பழம் காய்க்குது!

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
இரண்டு குடம் தண்ணி ஊத்தி 2 பூ பூத்தது எனப் பத்து வரைக்கும் வரும்.

அப்புறமாப்
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்

என ஆரம்பித்து பூக்களின் பெயர்கள் வரிசையாக வரும்.
சின்ன வயசில் கீழ்க்கண்ட பாடலைப் பாடி இரண்டு பேர் எதிரும் புதிருமாகக் கை கோர்த்து நிற்க, இன்னொருவர் அதற்குள்ளாக நுழைந்து வரவேண்டும். நுழையும் பெண் எதிர்பாரா சமயம் இருவரும் அவரைக் கைகளுக்குள்ளாகப் பிடித்தால் ஆட்டத்தில் அந்தப் பெண் அவுட். பிடிக்க முடியலைனா கை கோர்த்தவர்கள் இருவரும் அவுட்.

பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்

இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்

கை கோர்த்திருக்கும் இருவரும்

என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?

இனி ஒவ்வொரு பூவாக வரும்

சாமந்திப் பூவைப் பறிக்கிறோம், சாமந்திப் பூவைப் பறிக்கிறோம்.
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??

திரு சந்தானம் கொடுத்த பாடல்களும் மற்றும் இருவர் கொடுத்த பாடல்களும் அடுத்த பதிவில் காணலாம். :D  அவங்க அவங்க நினைவில் இருக்கும் பாடல்களை அளிக்கலாம்.  இவை அவரவர் பெயர், ஊரோடுமரபு விக்கியில் சேர்க்கப் பட்டுச் சுட்டியை அளிப்போம். நிரந்தரமாய் அங்கே பதிவாகி இருக்கும்.

Tuesday, May 15, 2012

ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! பகுதி 3


சரி, இப்போ நாம் கதையை என்னனு பார்க்கலாமா?  மாயா என்ற பெண்ணே இந்தக் கதையின் நாயகி என்று சொல்லப் பட்டாலும் தற்காலத்தின் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை அவள் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.  முன்னெல்லாம் அநேகமாய்ப் பெற்றோர் நிச்சயிக்கும் பிள்ளையை ஒரு கண நேரம் பார்த்துச் சம்மதம் சொல்லி, இருதரப்பிலும் லெளகீகங்கள் பேசி முடித்து என இருக்கும்.  இப்போதெல்லாம் யாருக்கும் நேரமில்லை.  அப்பா, அம்மாக்களும் பிசி;  பெண்கள், பிள்ளைகளும் பிசி. அவரவர் வேலை அவருக்கு. ஆகவே அவரவரே அவரவர் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.  ஆனாலும் இன்னமும் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களும் இருக்கின்றன.  


 மாயாவினுடையதும், சிறியோரால் நிச்சயிக்கப்பட்டுப் பெரியோர்களின் முழுச் சம்மதத்தோடு மிகச் சிறப்பாக அனைவராலும் பேசப்பட்ட ஒன்றாக நடந்தது.  ஆனாலும் முதல் இடறல் திருமண மயக்கத்திற்குப் பின்னர் மாயா ஆசைப்பட்ட மாயாவின் மேல்படிப்பில் ஆரம்பித்துப் பின்னர் அவள் கணவன் தன்னுடைய ஈகோவினால் வேலையை இழந்ததில் வந்து முடிந்தது.  மாயாவின் கணவன் மனைவி மேல்படிப்புப் படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ தனக்கு இழுக்கு என நினைக்கும் ஆணாதிக்க உலகின் கதாநாயகன். அந்த ஈகோ எப்படிப் பட்டதெனில் ஒரு ஆத்திர, அவசரத்துக்கு என மனைவி உதவிய நகைகளும், அவள் வேலைக்குச் செல்வதாய்க் கூறியதும், தன்னை அவமானம் செய்வதற்காக என்று அவன் எண்ணும்படி ஆயிற்று.  யதார்த்தத்தையும், தன் நிலையையும் புரிந்து கொள்ளாத மாயாவின் கணவன் ப்ருத்வி மனைவியைப் பிரிய நேரிட்டது.  அது விவாகரத்தில் வந்து முடிந்தது.  ஆக அதீத அழகு, புத்திசாலித் தனம், பணம், வசதி எல்லாம் இருந்தும் மாயாவால் அவள் கணவனோடு சந்தோஷமாய் வாழ முடியவில்லை.  எந்தத் தவறும் செய்யாமலேயே அவனால் குற்றம் சாட்டப்பட்டு இன்று விவாகரத்தும் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து கொண்டிருக்கிறாள். 

 வீணான வாழ்க்கையை நினைந்து வருந்திக் கொண்டிருந்த மாயாவுக்குக் கனவில்  தோன்றித் தன்னை அழைத்து உபதேசித்த  உருவம் தான் தன் குரு என அவர் சொற்பொழிவைக் கேட்டதும் புரிகிறது.  அவர் கூறும் உண்மைகள் பசுமரத்தாணியாக மனதிலும் பதிகிறது.  எந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை என்பதற்குக் காரணமான சுயச் சார்பையும் எடுத்துக் காட்டி விளக்குகிறார்.  தன்னைத் தானே உணரும் பெண்ணாக, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்கிறார்.  எப்படி எனில், அந்தக் காலத்தில் நம் பெரியவங்க சொல்லி இருக்காங்களே, "ங" போல் வளை என, அப்படி வளையச் சொல்கிறார்.  ஆம், விட்டுக் கொடுத்து அநுசரித்துப் போனால் மட்டும் போதாது.  சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்தும் கொடுக்க வேண்டும்.  வருவதை அப்படியே எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், மன உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு உதாரணமாய்க் காட்டுவது காந்தா என்னும் சாமானிய, வெகு சாமானியக் கூலி வேலை செய்யும் பெண்ணை.  கணவன் குடித்து விட்டுத் தன்னை அடித்துத் துன்புறுத்துகையில் ஒரு எல்லை வரை பொறுத்தவள் பின்னர் கணவனை உதறி எறிகிறாள்.  இதை எதிர்பார்க்காத கணவன் முதலில் எதிர்த்தாலும் பின்னர் அவள் உறுதியைப் புரிந்து கொண்டுவிடுகிறான். கணவனைத் திரும்ப அடித்து அவமானப் படுத்துவதாலோ அல்லது அவனை ஒரேயடியாய்க் கொன்றுவிடுவதாலோ தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்பதைப் பூரணமாய் உணர்ந்து கொண்டு அவனை அறவே ஒதுக்குகிறாள்.  இந்த மன உறுதியே பெண்களுக்குத் தேவை.  எல்லாராலும் சாத்தியமா எனக் கேட்கலாம்.  முடியவேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கியக் கருத்து.  "நானிருக்கேன் உனக்கு" என்று பெண்களுக்கு மறைமுகமாய்க் கிடைக்கும் பாதுகாப்புக் கவசமும், அதை எதிர்பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்காகவே வாழும் பெண்களும் நிறைந்த இவ்வுலகிலே பெண்கள் தங்களுக்குத் தாங்களே துணை; காவல்; தலைமை; அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டே  தனியாக நின்று கொண்டே மற்றவர்களை ஆதரிக்க வேண்டும்.


டிஸ்கி:  அநேகமாய் அடுத்த பதிவில் முடிச்சுடுவேனா? 

Monday, May 14, 2012

அப்பாவி! எங்கிருந்தாலும் ஓடி வருக!


Posted by Picasa 


ஸ்ரீராமர் புண்ணியத்திலே நேத்திக்கு ராத்திரி சாப்பிட்ட ரசம் சாதம், அரிசி அப்பளம் நெய்யில்லாமல், எண்ணெயில்லாமல் மைக்ரோவேவ் புண்ணியத்தோடு  சாப்பிட்டது நான்கு நாட்களுக்குப் பின்னர் தேவாமிருதமாக இருந்தது என்றால் இன்னிக்குக் காலையிலே செய்த இட்லியும் அப்படியே.  திரும்பச் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமானு பயந்துட்டு இருந்தேன். :D இன்னிக்கு இட்லி பற்றிக் குறிப்பிட அப்பாவி தான் காரணம்.  சாப்பிடறச்சேயே இட்லியைக் கஷ்டப்பட்டுக் குடிக்கும் அப்பாவி கோவிந்த் தான் நினைவில் வந்தார்.   இட்லியை ஃபோட்டோ கூட எடுத்திருக்கணும்.  அப்போத் தோணவே இல்லை.  இது ஒரு திடீர் போஸ்ட்! :D

இட்லி செய்முறை ஃபார் அப்பாவி: பச்சரிசி, (உங்க கனடாவில் கிடைக்கும் லாங் க்ரெயின் ரைஸ், இட்லி புழுங்கலரிசி, இரண்டும் ஒரு ஒரு கப் சமமாக எடுத்துக்கொண்டு கால் கப் உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தே நனைத்துக் கொண்டு நன்கு கழுவிக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  எல்லாவற்றையும் சேர்த்தே மிக்சியில் அல்லது கிரைண்டரில் நன்றாக அரைக்கவும்.  புளிக்க வைக்கவும்.  பின்னர் இட்லியோ, தோசையோ ஜமாய்க்கவும்.

இது ஆப்பம் செய்வதற்கான ரெசிபி.  இம்மாதிரி நைஸாக அரைத்துக் கொண்டு மாவைப் புளிக்க வைத்துக் கொஞ்சம் மாவில், தேங்காய்ப் பால் ஊற்றிக் கரைத்துக்கொண்டு மதுரை ஸ்பெஷல் ஆப்பம் செய்வேன்.  இப்போவெல்லாம் இரும்புச் சட்டியைத் தூக்கிச் சுழற்றும் அளவுக்கு முடியறதில்லை.  சுழற்ற ஆட்களும் கிடைக்கிறதில்லை! :P அதனால் தோசைக்கல்லிலேயே ஊற்றித் தோசையாக வார்த்துவிடுவேன்.  நன்றாகவே இருக்கிறது.  ஒரு நாள் அந்த மாவு கொஞ்சம் மிஞ்சிப் போனதைச் சத்தமில்லாமல் இட்லியாக வார்த்துப் பார்க்க, அதன் சுவையைப் பார்த்துவிட்டு இப்போ சத்தம் போட்டுக்கொண்டே இப்படித் தான் செய்யறேன்.  இரண்டு பேருக்குனுக் கொஞ்சமா அரைக்கவும் வசதி! சாப்பிடறவங்களைக் கடவுள் காப்பாத்துவார்னு சிம்பாலிக்காக் காட்டத்தான் ராமர் படம்! :)))))))))

Saturday, May 12, 2012

ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! இன்னம்புராரின் கருத்தும், என் பதிலும்!


  1. பெண்கள் எப்படி அவர்களே தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும்? அவர்களுக்கு கல்வி மறுத்து வந்த காலகட்டத்தில்?///
கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது அந்நிய ஆதிக்கத்தின் விளைவு.  இதனால் பல பெண்கள் மதம் மாற முற்பட்டதோடு வேறு பல விளைவுகளும் உண்டாயின.  இதை அனைவருமே அறிந்திருக்கிறோம். பல பெண்களும் மானபங்கப்படுத்தப்பட்டதோடு அல்லாமல், அந்நியமதத்தினரைத் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலப் படிப்பைப் படித்த பெண்களும் அவ்வாறே மதம் மாறத் தலைப்பட்டார்கள்.  ஆகவே பெண்களை அடக்கி ஒடுக்கும் முறை கட்டாயமாய் ஏற்பட்டது. இது ஒரு சாபக்கேடுதான் என்றாலும் பெண்களே கலாசாரத்தின் ஆணிவேர் என்பதால் வேரைக் கெல்லி எறிய முடியாது என்பதால் வேருக்கு நீர் வார்ப்பதாக நினைத்துக்கொண்டு பூச்சி மருந்தை அள்ளித் தெளித்தனர்.  இது பல விபரீத விளைவுகளுக்குக் காரணமாகவும் ஆயிற்று.

2.     2.   பெண்ணின் தனித்தன்மை என்றால் என்ன? பூஜா-பாட் கர்னா?

பெண் பெண்ணாக இருத்தலை உணர்வதே அவள் தனித்தன்மை என்பது என் தனிப்பட்ட கருத்து. பூஜா-பாட் கர்னா எல்லாம் அவரவர் சொந்த விருப்பம்.  ஆனால் தான் பெண் என்பதை உணர்ந்து கொண்டு, ஆணோடு போட்டியிடுவது என்பதைத் தவிர்த்து ஒரு பெண்ணாகவே வாழ்க்கையில் ஜெயித்துத் தான் எப்படிப்பட்டவள் என்பதை உலகுக்கு உணர வைக்க வேண்டும். அதோடு புலி வேஷம் போட்டுக்கொண்ட பூனையாக இருக்காமல் பெண் என்பதை முழு மனதோடு அங்கீகரித்துக்கொண்டு அதில் மகிழ்ச்சியும், திருப்தியும் காண வேண்டும்.  இந்த நாவலில் வரும் காக்கை போல் தன் வேஷத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது. நம் இயல்புப்படி இருப்பதே தன்னிறைவு அளிக்கும். அதோடு தன் குடும்பம், தன் உறவுகள் என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போக்கும் தேவை;  ஆனால் இன்றைய அவசர உலகில் இதுக்கெல்லாம் யாருக்கும் நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை.  உறவைத் துச்சமாகவே கருதும் மனப்போக்கு இன்றைய சூழ்நிலையில்.


  1. பெண்ணாய் பிறந்தது பெருமை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஆண்கள் மட்டும் தான் உணர்வு பூர்வமான முடிவு எடுக்கலாமா?

ஆண்கள் யாரும் உணர்வு பூர்வமாக முடிவு எடுப்பதில்லை.  அவர்கள் உலகே வேறு. ஆணுக்குக் குடும்பம் மட்டும் உலகம் இல்லை. ஆண் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் நண்பர்களைப் பெற்றால் அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்வான். (இது பொதுவான கருத்தே,  இதில் மாறுபட்டிருக்கும் ஆண்களும் உண்டு. அதனால் அடிக்க வராதீங்க யாரும்) ஆனால் பெண்ணோ ஒரு சிநேகிதனோ, சிநேகிதியோ ஆத்மார்த்தமாய்ப் பழகினால் கடைசி வரை மாறவே மாட்டாள்.  பெண்ணுக்கோ முதலில் குடும்பமே அவள் உலகம், இன்றளவும்.  அதன் பின்னரே மற்றவர்களைப் பார்க்கிறாள்.  ஆண்களின் சிந்தனைகளே அறிவுபூர்வமானவை.  உணர்வு பூர்வமான பெண்களின் சிந்தனைகளை அவர்கள் கேலி செய்வதையும் இன்றும் காணமுடியும். இதைப் பெண்களுக்கு இறைவன் அளித்ததொரு பரிசு அல்லது உணர்வைப் பூரணமாய்ப் புரிந்துகொள்ளும் முன்னெச்சரிக்கை எனச் சொல்லலாமோ?  ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு காலில் இதை உணர்வறிவு எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.  இந்த உணர்வறிவு பெண்ணுக்கு மட்டுமே உண்டு. இந்த உணர்வறிவால் பெண்கள் புரிந்து கொள்ளும், பல விஷயங்கள்! ஆனால் கடைசியில் அவை உண்மையாக இருப்பதில் ஆண்கள் திகைத்துப் போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.  இது மட்டுமில்லை; உணர்வு பூர்வமான எந்த வெளிப்பாட்டையும் ஆண்கள் காட்டிக்கொள்வதில்லை;  ஒரு சிலரைத் தவிர. :D

  1. அந்த ஹூஸ்டன் விவகாரம், உங்களில் யாருக்கு, முழு உண்மை தெரியும்? எனக்கு அந்த மாதிரி ஒரு லாஸ் ஏஞ்செலஸ் விவகாரம் தெரியும். தன் குழந்தைகளை நதியில் முழுகடைத்த இந்திய அப்பாவி பெண்ணின் புருஷன் படுபாவி. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னால், கணவனை தலைகாணியால் அமுக்கி கொலை செய்தாள், ஒரு அந்தணக்கிழவி, திருமங்கலத்தில். அவளும் தான் அவனுடைய கொடுமையில் 50 வருடம் வெந்தவள்.
ஹூஸ்டன் விபரங்கள் நீங்க இங்கே குறிப்பிட்டதுக்குப் பின்னரே நான் படித்தேன்.  இந்த முறை ஏற்கக் கூடியதே அல்ல.  அந்த ஒரு கண நேர உணர்வை அடக்கி ஆளவேண்டும் என்பதே என் கருத்து.  அந்தப் பெண்ணுக்கு விடுதலை பெற வேறு வழியே இல்லாமல் இருந்திருக்குமா?? அதோடு எண்ணெய் தேய்த்துவிடுவதாய்க் கூறிவிட்டுப் பெட்ரோலை ஊற்றி இருக்கிறார். பெட்ரோலின் வாசம் தெரியாமல் போயிருக்குமா கணவனுக்கு?  கொஞ்சம் குழப்பமாய்த் தான் இருக்கிறது.  இதில் உண்மை என்னவென்று தெரியாமல் முன் கூட்டிய கருத்துக்களைப் பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :( தலைகாணியால் கணவனை அமுக்கிக் கொல்ல ஐம்பது வருடம் காத்திருந்தவளுக்குக் கடைசியில் என்ன கிடைத்தது? :( எப்போதோ விலகி இருக்கலாமே!  விலகி என்றால் தனியாக வந்து என்று அர்த்தம் இல்லை; வீட்டிலேயே, ஒரே வீட்டிலேயே ஒதுக்கி வைத்தல்.  இம்முறையில் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். மன திடமும் தேவை.எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி கணவனின் கொடுமை தாங்க முடியாமல் ஒரே வீட்டிலேயே தனியாக வாழ ஆரம்பித்தாள்.  இது ஏன்? வெளியே வந்திருக்கலாமே எனத் தோன்றினாலும், கணவனுக்கு மறைமுகமாய் அவள் கொடுத்த தண்டனை இது.


  1. இன்று விருந்தாவன் விதவைகளின் பிரச்னைகளை அலச ஒரு ஏழு மெம்பர் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அந்தக் கொடுமையை நீங்கள் யாராவது பார்த்தது உண்டா? எனக்கு தெரியும், ஓரளவு. விதவைகளின் சொத்தை பிடுங்கி, வீட்டை விட்டு துரத்தி, பிச்சை எடுக்க வைத்து, அத்தையும் பிடுங்கும் பார்ப்பன அட்டூழியம் நூறு வருடங்களுக்கு மேல் நடக்கிறது. கணிசமான அளவு பார்ப்பனக்கழுதைகள். மற்ற கழுதைகளும் உண்டு.
விருந்தாவன் விதவைகளை நேரில் பார்த்து மனம் நொந்து அவர்களுக்குப் பணம் கொடுக்கக் கேட்டபோது முடியாது;  அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புங்க என்று வாதாடி!  அவர்களோடு சண்டை போட்டு! என்னத்தைச் சொல்வது?  பெரும்பாலும் வங்காள விதவைகளே அதிகம்.  இதற்கு ஒரு முடிவு இப்போதாவது உச்சநீதி மன்றத்தின் மூலம் வந்தால் நன்மையே.  ஆனால் இனி இப்படி அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்த முடியாது.  சமூகம் இதன் தீமையை நன்கு உணர்ந்திருக்கிறது.

Thursday, May 10, 2012

severely affected by gastro enteritis, so no post for two days.(at least)

Wednesday, May 09, 2012

ஆனந்தத்தைத் தவறவிட வேண்டாம்!

கடந்த இரு மாதங்களாகவே இணையத்துக்குச் சரியாக வரமுடியலை.  அதுக்காகச் சும்மாவா இருக்க முடியும். தேவன் புத்தகங்கள் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஶ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு எல்லாத்தையும் பத்து லக்ஷமாவது முறையாகப் படிச்சுக் கிழிச்சேன்.  ஹிஹிஹி, நிஜம்மாவே புத்தகங்கள் எல்லாமும் நாளாகிட்டதாலே பேப்பர், பேப்பரா வந்துட்டு இருக்கு. மங்கள நூலகம் இருக்கிறச்சே வாங்கின புத்தகங்கள். ஒரு மாதிரிப் பக்கங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு படிக்கும் டெக்னிக் நமக்குக் கைவந்த கலை. அப்போத் தான் ரேவதி அனுப்பி வைச்ச (ஹிஹிஹி, எங்கள் ப்ளாக், நேரே வந்து தரலை இல்லை; அதனாலே நீங்க கொடுத்ததாய்ச் சொல்ல மாட்டேனே) ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் புத்தகம் கிடைச்சது.

புத்தகம் பெண்ணுரிமை குறித்தது. நாமோ பெண்ணுரிமைக்கு எதிரி.  நமக்கு இந்தப் புத்தகமானு கொஞ்சம் ஆச்சரியத்தோடேயே படிக்க ஆரம்பிச்சேன்.  என்ன ஆச்சரியம்! நான் நினைக்கிறதை, சொல்லிக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்லி இருக்காங்க. பெண்கள் அவங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அந்தத் தீர்வு அறிவு சார்ந்ததாக, சமூகம் ஏற்கக் கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். அதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.  அதையே தான் இவங்களும் சொல்லி இருக்காங்க ஒரு கதை மூலம்.


பெண்ணைக் குறித்து முதலில் செய்திருக்கும் வர்ணனை அபாரம்.  கடைசியில் குறிப்பிட்டிருக்கும் சிறப்பான முத்திரை வசனமும் பிரமாதம்.  அது தான் தன் உன்னதம், தன் மதிப்பு இவற்றை மறக்கும் தன்மை, பெண்ணின் படைப்பில் சேர்க்கப் பட்டிருப்பது. இதைக் கொடுத்து இறைவி தன் படைப்புகளுக்குள்ளேயான ஏற்றத் தாழ்வைச் சரிக்கட்டுவதாகச் சொல்லப் பட்டிருந்தாலும், பெண் உண்மையிலேயே உன்னதமானவள். தன் மதிப்புள்ளவள்.தன்னைக் குறித்த மதிப்பை அதே சமயம் அறியாதவள் தான்.  உணர்வுகளுக்கு ஆட்படுபவள். சமீபத்தில் கூட ஒரு சிநேகிதி எழுதிய ஒரு சிறுகதையின் முடிவில் கணவனால் கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட வீட்டு வேலை செய்யும் பெண், கடைசியில் அவனைக் கொன்றுவிடுவதாகச் சொல்லப் பட்டிருந்தது. எனக்கு அந்த முடிவு பிடிக்கவில்லை.

அப்படி உணர்வு பூர்வமான முடிவை எந்தப் பெண்ணும் எடுக்கக் கூடாது.  சிந்திக்க வேண்டும். சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஆரம்பத்தில் கடினமே போல் தோன்றினாலும், பின்னர் தானாகக் கை வந்துவிடும். பெண் விடுதலை என்பது ஆண்களோடு சரிசமமாகப் போட்டிபோடுவதில் இல்லை. நிச்சயமாய் இல்லை. பெண்ணின் தனித்தன்மையை இழக்காமல் பெண்ணாக இருந்து கொண்டே நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதே. என்னைப் பொறுத்தவரையில் பெண்ணாய்ப் பிறந்திருப்பதில் பெருமையே!


தொடரலாம்! .

சித்தீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ


Posted by Picasa